English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

1 ஆமோத்சின் மகனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான்.
2 பரலோகமே, பூமியே, கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள்! கர்த்தர் கூறுகிறார்: “நான் எனது பிள்ளைகளை வளர்த்தேன். நான் எனது பிள்ளைகள் வளர உதவினேன். ஆனால் எனது பிள்ளைகள் எனக்கு எதிரானார்கள்.
3 ஒரு பசு தன் எஜமானனை அறியும். ஒரு கழுதை தன் எஜமானன் தனக்கு உணவிடும் இடத்தையும் அறியும். ஆனால் எனது இஸ்ரவேல் ஜனங்கள் என்னை அறியார்கள். என் ஜனங்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை”.
4 இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள்.
5 தேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது.
6 உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை.
7 உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன.
8 சீயோனின் மகள் (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது.
9 இது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோரா போல முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
10 சோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள்.
11 தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன்.
12 என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்?
13 “தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன்.
14 நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன்.
15 “நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன.
16 “உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்!
17 நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்”.
18 கர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும்.
19 “நான் சொல்கிறவற்றை நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்நாட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள்.
20 ஆனால் நீங்கள் கவனிக்க மறுத்தால் எனக்கு எதிராவீர்கள். உங்கள் பகைவர்கள் உங்களை அழிப்பார்கள்” என்றார். கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
21 “தேவன் கூறுகிறார். எருசலேமைப் பாருங்கள். அது என்னை நம்பி என்னைப் பின்பற்றிய நகரமாக இருந்தது. அது இன்று ஒரு வேசியைப்போன்று மாறக் காரணம் என்ன? இப்போது அவள் என்னைப் பினபற்றவில்லை. எருசலேம் முழுவதும் நீதி குடியிருந்தது. எருசலேமில் வாழ்கின்ற ஜனங்கள் தேவனுடைய விருப்பம்போல வாழவேண்டும். ஆனால் இப்போது, அதில் கொலைக்காரர்கள் வாழ்கிறார்கள்.”
22 நன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்ற தாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சை ரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று.
23 உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கலகக்காரர்களாகவும் கள்ளர்களின் நண்பர்களாகவும் இருக்கின்றனர். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் இலஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர். தீமை செய்வதற்குப் பணம் பெறுகிறார்கள். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வதில்லை. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கணவனை இழந்த விதவைகளின் தேவைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.
24 இத்தனையும் செய்ததால் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், இஸ்ரவேலின் வல்லமை மிக்க தேவன் கூறுகிறதாவது: “என் பகைவர்களே, உங்களைத் தண்டிப்பேன். உங்களால் எனக்குத் தொல்லை கொடுக்கமுடியாது.
25 ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன்.
26 ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப் போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்” என்றார்.
27 தேவன் நல்லவர். அவர் நீதியானவற்றை மட்டுமே செய்வார். அவர் சீயோனையும் அதற்குத் திரும்பி வருகிறவர்களையும் மீட்பார்.
28 ஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.)
29 நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள்.
30 இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள்.
31 வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப் போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது.
×

Alert

×